3 crore periyapandiku 3 Lakhs for Krishnaswamy
’அப்பா எங்கே?’ நேற்று பிற்பகலில் இருந்து இந்தியாவை உலுக்கி வரும் கேள்வி இதுதான்....
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் மகாலிங்கம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இவரது குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது. ஆனாலும் தேர்வை எழுதியாக வேண்டும் எனும் உந்துததலில் மகன் மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு அவரது அப்பா கிருஷ்ணசாமி எர்ணாகுளத்துக்கு ரயிலில் சென்றார். அதி முக்கியமான தேர்வுக்கு இப்படி அதிக தூரம் அலைந்து திரிவது உள்ளிட்ட நீட் தேர்வின் கெடுபிடிகள் கிருஷ்ணசாமியின் மனதை பிசைந்து தள்ள, மனிதர் கேரளாவில் மாரடைப்பால் இறந்தார்.
இந்நிலையில் ’நீட் தேர்வு வருடந்தோறும் நரபலி கேட்கிறது’ என்று ஸ்டாலினில் துவங்கி எதிர்கட்சி தலைவர்கள் மத்திய அரசின் ஆதிக்கத்திலுள்ள இந்த தேர்வையும், தமிழக பிள்ளைகள் மீதான அடக்குமுறைக்கு எதிர்கேள்வி கேட்காத தமிழக அரசையும் சாடித் தள்ளினர்.

அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது பொது நல அமைப்புகள், வணிகர் அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் என்று ஆரம்பித்து சாதாரண தனி மனிதன் வரை இந்த மரணத்தை மையமாக வைத்து மாநில மற்றும் மத்திய அரசை மிக கடுமையாய் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் அடக்குமுறைகளுக்கெல்லாம் தலையாட்டி பொம்மையாய் இருந்து, தமிழர்களை துன்பக்கடலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஆழ்த்துவதாக போட்டுப் பொளந்தனர் விமர்சககர்கள்.
இந்நிலையில் இறந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேவேளையில் அவரிடம் மகாலிங்கத்தின் அம்மா கோரிக்கை வைத்தபடி மகாலிங்கத்தின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில் இந்த விஷயம் பெரும் விவாதத்துக்கு ஆளாகியிருக்கிறது. அதாவது “ கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி சூட்டில் பலியானார். இன்ஸ்பெக்டரை கொள்ளைக்கூட்டம் தான் சுட்டுக் கொன்றது என்று தகவல் பரவிய நிலையில், உண்மையை உருப்படியாய் விசாரிக்காமல் அந்த குடும்பத்துக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதன் பின் பெரியபாண்டியை சக இன்ஸ்பெக்டர் முனிராஜ்தான் தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டார் என்கிற உண்மை வெளியானது. ஆனாலும் 1 கோடி அறிவிக்கப்பட்டதில் எந்த பின் வாங்கலும் இல்லை.
ஆனால் நீட் தேர்வின் அலைக்கழிப்புக்கு அநியாயமாக பலியான கிருஷ்ணசாமிக்கு வெறும் 3 லட்சத்தை முதல்வர் அறிவித்துள்ளது அவலம். சொந்த மாநிலத்தில் தேர்வு எழுத தகுதி இருக்கும் நிலையில் வீணாக கேரளத்துக்கு அலைக்கழிக்கப்பட்டார் மகாலிங்கம். ஏற்கனவே நீட் தேர்வுகள் கிடுக்கிப்பிடியான ஒன்று. அதிலும் இப்படி மொழி தெரியா மாநிலத்தில் சிக்கியது சீரழிவின் உச்சம். அப்பேர்ப்பட்ட நிலையில் மத்திய மாநில அரசின் ஆதிக்கம் மற்றும் தமிழக அரசின் மெளனத்தால் இந்த உயிர் பிரிந்திருக்கிறது. சொல்லப்போனால் இது அரசுகளே தெரிந்தும் தெரியாமலும் நடத்திய கொலை. இதற்கு இழப்பீடு வெறும் 3 லட்சம் தானா?

பெரிய பாண்டியை கொள்ளையன் சுட்டுக் கொன்றிருந்தாலும் கூட கடமையாற்ற சென்றவர் மாய்ந்ததால் 1 கோடி கொடுத்திருக்கலாம் தப்பில்லை. ஆனால் முனிராஜ் நடத்திய விபத்தால் இறந்தும் கூட அந்தப்பணம் வாபஸ் பெறவில்லையெ!
ஆக பெரியபாண்டி உயிருக்கு ஒரு விலை, கிருஷ்ணசாமியின் உயிருக்கு சிறு விலையா? என்னாங்க எடப்பாடி சார் உங்க நியாயம்?” என்று கேட்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்த நிலையில் ‘மகாலிங்கத்தின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கப்போகிறதே, அதன் பண மதிப்பு பெரிதாக இருக்குமே?’ என்று அரசுக்கு ஆதரவாக சிலர் கேள்வி எழுப்ப, ‘தன் உயர்கல்வி செலவுக்காக அரசிடம் மகாலிங்கம் பணம் பெறுவதென்பது தண்ணீரில் நெய் எடுப்பதற்கு சமம். எந்த காலத்தில் இப்படியான உறுதி மொழிகளை நிறைவேற்றியது தமிழக அரசு?!” என்று அதிரடியாய் எதிர் கேள்வி கேட்கின்றனர்.
சர்தான்!
