பெரம்பலூர்

பெரம்பலூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 28 அரசு மருத்துவமனை மருத்துவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.

“மருத்துவ பட்ட மேற்படிப்பு, உயர் பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2018-19-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ பட்ட படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும்.

நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் சங்குபேட்டைப் பகுதியில் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் காவலாளர்கள், சாலை மறியல் செய்த மாநில இணை செயலாளர் அர்ஜூணன், மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் ஆனந்தமூர்த்தி உள்பட 28 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் ஒருபக்கம் நடந்தாலும், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களை ஏற்பாடு செய்திருந்தனர். அதேபோன்று, அவசர சிகிச்சைப் பிரிவில் பணி மருத்துவர்கள் இருந்தனர்.