Asianet News TamilAsianet News Tamil

இரண்டு ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் 240 கிராம சேவை மையங்கள்; வீணாகும் ரூ.40 கோடி...

240 Village Service Centers that have been closed for two years Rs 40 crore going waste
240 Village Service Centers that have been closed for two years Rs 40 crore going waste
Author
First Published Feb 27, 2018, 10:27 AM IST


திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 240 கிராம சேவை மையங்கள் இரண்டு ஆண்டுகளாக மூடிக் கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

மத்திய, மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள், கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படுகின்றன.

இதில், கடந்த, 2015-ஆம் ஆண்டு முதல் மின்னாளுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெரும்பாலான அரசுத்துறை சேவைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பம், போட்டித்தேர்வு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது என பல்வேறு சேவைகள் இம்மையத்தில் கிடைக்கின்றன.

அரசுத்துறை பணிகள் ஆன் லைன் மயமாகிவிட்டதால், பொதுசேவை மையங்களை மட்டுமே மக்கள் சார்ந்திருக்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் மட்டும் இருந்த பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தாலுக்கா அலுவலகங்களில் சான்றிதழ், பட்டா மாறுதலுக்கு காத்துக்கிடந்த நிலை மாறி, பொதுசேவை மையத்திலேயே, பதிவு செய்து, சான்று பெறும் வசதி வந்துவிட்டது.

இதனையடுத்து, ஊராட்சிகள் தோறும் சேவை மையங்கள் அமைத்து மக்களின் அலைச்சலை குறைக்க வேண்டும் என மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி, தலா ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில், மூன்று பெரிய அறைகளுடன், கிராம சேவை மையம் கட்டப்பட்டது.

இதில், மகளிர் குழுவினருக்கு முறையான பயிற்சி அளித்து, கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதியை பெற்று, பொதுசேவை மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டது. எனினும், கட்டுமானப் பணி முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், கிராம சேவை மையங்கள் இன்று வரை திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன.

மாவட்டத்தில் உள்ள 240 ஊராட்சிகளில், ரூ.40 கோடி மதிப்பீட்டில் 240 பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தும், அதில் ஒன்று கூட பயன்பாட்டுக்கு வராததால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு அரசின் சேவையும் தடைப்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி கிராமம்தோறும் கட்டி முடிக்கப்பட்டுள்ள 240 பொதுசேவை மையங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், அதிவேக இணையதள வசதியுடன் கூடிய இ-சேவைகளை மகளிர் குழுக்கள் மூலமாக நடத்த முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டிக்கிடக்கும் இ-சேவை மையங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கூறியது: "மக்களின் சிரமத்தைக் குறைக்க கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம், அதிகாரிகளின் அலட்சியத்தால் பூட்டிய உள்ளது. அரசு பணமும் வீணாகி வருகிறது. இதனால், இக்கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குடிகாரர்கள் அருந்தும் பார் ஆகவும் மாறி உள்ளது. சில மையங்களில் ஜன்னல்களைக் கூட சிலர் பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். எனவே, சேவை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios