200 acres of agricultural crops drowned in the waters of the lake Farmers fight for compensation ...

தருமபுரி

தருமபுரியில் பெய்த பலத்த மழையால் ஏரியின் கரை உடைந்து 200 ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. இதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது வெள்ளாச்சாரிக்குட்டை ஏரி. இந்த ஏரி 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

ஏரியைச் சுற்றியுள்ள கரையை மேம்படுத்தவும், மதகுகள் அமைக்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது.

முதல் கட்டமாக இரு மதகுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், முதல் மதகு அமைந்துள்ளப் பகுதியில் ஏரிக் கரையில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால், ஏரியில் இருந்த மழைநீர் வெளியேறி தம்மணம்பட்டி, பாளையாத்தனூர், ஆவரங்காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் புகுந்ததால் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி, மஞ்சள், சோளம், கரும்பு உள்ளிட்ட பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி ஆட்சியர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், காவல் துணை கண்காணிப்பாளர் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் முல்லைக்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளையும், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலங்களையும் நேரில் பார்வையிட்டனர். இதனையடுத்து உடைப்பு ஏற்பட்ட ஏரிக்கரையை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அங்குக் கூடியிருந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், “இந்த ஏரிக்கரையை மேம்பாடு செய்யவும் இந்த ஏரியில் இருந்து விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் மதகுகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணியை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சனை தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுச் சென்று இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.