சென்னை, டிஜிபி அலுவலக வளாகத்தில் 2 ஆயுதப்படை போலீசார் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டனர். அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனையும் அவர்கள் பறித்தனர். தீக்குளிக்க முயன்ற போலீசார் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டு, கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் கணேஷ், ரகு. தங்களை சாதி ரீதியாக உயர் அதிகாரிகள் நடத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து புகார் கொடுப்பதற்காக வந்த அவர்கள், டிஜிபி அலுவலகம் வந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்த புகாரை கொடுத்து விட்டு வெளியே வந்தனர். இந்த புகார் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இதன் பின்பு வெளியே வந்த கணேஷ், ரகு, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டனர். இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அருகில் இருந்தபோலீசார், அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். மேலும் கணேஷ், ரகு மீது தண்ணீர் ஊற்றி அவர்கள் டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

கணேஷ், ரகு இருவரும் 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட
அவர்கள், தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தேனி மாவட்ட முதலாம்படை பிரிவின் ஆயுதப்படை
ஆய்வாளர் சீனிவாசன் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு போலீசார், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணேஷ், ரகு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.