2 percent reservation in government jobs for homeland returns - resolution at the homeland returning conference ...
நீலகிரி
அரசு பணிகளில் தாயகம் திரும்பியோருக்கு 2 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாயகம் திரும்பியோருக்கான வாழ்வுரிமை மாநாடு நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காந்தி திடலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தாலுகா செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மாரியப்பன், மகேஷ், தங்கவேலு, சுப்ரமணி, சச்சுநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பத்ரி மாநாட்டை தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில், "தாயகம் திரும்பிய மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் அருள்நகர், இடுக்கொரை, கணபதி புரம், சிவகிரி நகர், குறிஞ்சி நகர், அம்பாள் காலனி, தென்றல் நகர், அத்திகம்பை, பாறைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு நிலம் வகை மாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கி அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
டேன்டீ தொழிலாளர்கள், மற்றும் தொழிற்சாலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பணிகளில் தாயகம் திரும்பியோருக்கு 2 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் நிதியை தாயகம் திரும்பியோர் வசிக்கும் பகுதிகளுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொது செயலாளர் சாமுவேல்ராஜ், துணை செயலாளர் சிவஞானம், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தாலுகா செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ் வரவேற்றார். முடிவில் கட்சி நிர்வாகி மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
