இராமநாதபுரம்

இரண்டாவது நாளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இராமநாதபுரத்தில் இரயில் மறியலில் ஈடுபட்ட 604 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்கும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அளவில் 2 நாட்கள் இரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரத்தில் திங்கள் கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரயில் மறியல் போராட்டத்தின்போது 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 2–ம் நாளான செவ்வாய்க்கிழமை இராமநாதபுரத்தில் தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகளின் சார்பிலும், விவசாய சங்கத்தினர் சார்பிலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறே இரயில் மறியல் செய்ய முயன்றனர்.

திருச்சியில் இருந்து இராமேசுவரம் வந்த பயணிகள் இரயிலை மறித்து இரயில் என்ஜின்மீது ஏறி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த இரயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், முன்னாள் கவுன்சிலர் அய்யனார், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகர செயலாளர் கார்மேகம், முன்னாள் இளைஞரணி துணை செயலாளர் சுப.த.சம்பத், மாவட்ட இலக்கிய அணி கிருபானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, தொழிலாளர் வாரிய தலைவர் தாமரைக்குளம் சிவலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், பட்டணம்காத்தான் முன்னாள் ஊராட்சி தலைவர் கவிதாகதிரேசன், மாணவரணி துணை அமைப்பாளர் கூரிதாஸ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் புல்லாணி, பரமக்குடி துரைச்சாமி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இதேபோல, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட சிறப்பு அழைப்பாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் தேவேந்திரன், நகர் தலைவர் கோபி, திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி தலைமையில், நகர் தலைவர் குமார், செய்தி தொடர்பாளர் கண்ணன்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் உதவி காவல்துறை சூப்பிரண்டு சர்வேஷ்ராஜ், கீழக்கரை துணை காவல்துறை சூப்பிரண்டு மகேஸ்வர் ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 604 பேரை கைது செய்தனர். இதேபோல, பரமக்குடியில் இரயில் மறியல் செய்ய முயன்ற 10 பெண்கள் உள்பட 125 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் பத்மநாபன் தலைமையில் ஏராளமானோர் இராமேசுவரத்தில் இருந்து வந்த இரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர்.

அவர்கள் இராமநாதபுரம் அருகே இரயில் வந்தபோது அபாய சங்கிலியை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தி இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரயில்வே காவல்துறையினர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மறியல் செய்த 18 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.