அம்மாபேட்டை, பவானி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் இருவரைக் கொன்றுவிட்டு தப்பியோடிய இரண்டு ஓட்டுநர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
அம்மாபேட்டை பகுதியில் மற்றொரு விபத்து நடந்தது. அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சின்னசீரங்கனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் மணிகண்டன் (22). வெல்டிங் தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கோம்புபள்ளம் பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே மேட்டூரில் இருந்து ஆசிட் ஏற்றிக் கொண்டு பவானி நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் பவானி அருகே உள்ள வரதநல்லூர் மூலக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் குருசாமி. அவருடைய மகன் உத்திரன் (38). இவர் குமாரபாளையத்தில் தறிதொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி பச்சியம்மாள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வரதநல்லூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகம் அருகே வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்து நடந்ததும் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். விபத்தில் தூக்கி வீசப்பட்ட உத்திரன் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பச்சியம்மாள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று உத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்கண்ட 2 விபத்துகளை ஏற்படுத்திய டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். தலைமறைவான அவர்கள் 2 பேரையும் அம்மாபேட்டை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
