The cow was held last January jallikattu. However the Supreme Court ban the police refused to conduct jallikattu. Thus college students across the arapporattam happened
கடந்த ஜனவரி மாதம் மாட்டு பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற தடையால், ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நடந்தது.
இதைதொடர்ந்து சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில், லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். சுமார் 10 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த அறப்போராட்டத்தினால், அனைத்து நாடுகளும் தமிழகத்தை திரும்பி பார்க்க செய்தது.
இதனால் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டத்தின் கடைசி நாளில் ஒரு தரப்பினர் வெளியேற மறுத்து, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதலும், வன்முறையும் உருவானது.
இந்த போராட்டத்துக்கு முடிவு ஏற்பட்ட பிறகும், மெரினா கடற்கரையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களும்,இளைஞர்களும் நடத்தப்போவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை வழக்கமான 500 போலீசாருடன் கூடுதலாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காவல் துறை உயர் அதிகாரிகளும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், திருவள்ளுவர் சிலை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென 10 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் ஏராளமானோர் மெரினா கடற்கரையில் பொழுதை கழிக்க நினைப்பார்கள். அதுபோன்ற பொழுதுப்போக்கு மையம் தற்போது கலவர பூமியாக மாறி வருகிறது.
வின்னர் திரைப்படத்தில், நடிகர் வடிவேலுவின் வசனத்தில் “தம்பி இது கலவர பூமி, இங்க வந்துடாதீங்க. இங்க ரத்த ஆறு ஓடும்” என கூறுவார். அதே நிலை தற்போது மெரினாவுக்கு ஏற்பட்டுள்ளது.
