காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பல மாவட்டங்களில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதில் மரம் சார்ந்த விவசாயத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள், பராமரிப்பு முறைகள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்து களப்பணியாளர்கள் பயிற்சி அளித்தனர்.

மரம் சார்ந்த விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் வகையில், மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டங்களை 'காவேரி கூக்குரல்' இயக்கம் நடத்தி வருகிறது. இன்று (ஜூலை 26) கோயம்புத்தூர், நாமக்கல், செங்கல்பட்டு, திண்டுக்கல், விழுப்புரம், ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தென்காசி, தஞ்சாவூர், கடலூர் உட்படப் பல மாவட்டங்களில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

மரம் சார்ந்த விவசாயமும் லாபகரமான உத்திகளும்

மரம் சார்ந்த விவசாயத்தை லாபகரமாகச் செய்யும் உத்திகளைக் காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள் விவசாயிகளுக்கு விளக்கினார்கள். மரக்கன்றுகளைகையாளும் முறை, மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்வு செய்தல், நடவுக்கு முந்தைய நிலத் தயாரிப்பு மற்றும் மரக்கன்று நடும் வழிமுறைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

மேலும், கன்று நட்ட பின் அதன் திடமான வளர்ச்சிக்குத் தேவையான பராமரிப்புகள், சரியான முறையில் கவாத்து (Pruning) செய்யும் முறை, சந்தன மரத்துடன் துணைப்பயிர் நடுவதன் முக்கியத்துவம் மற்றும் கோடைக் காலத்தில் நீர் மேலாண்மை குறித்தும் விளக்கப்பட்டது. மர அறுவடை வரை விவசாயிகள் தொடர்ந்து வருமானம் பெறுவதற்கு ஊடுபயிர் சாகுபடி அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், மர விவசாயத்தில் மிளகு சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறித்தும் விவசாயிகள் தெரிந்துகொண்டனர்.

நிகழ்ச்சி குறித்து விவசாயிகள் கூறுகையில், "இத்தகைய மாதாந்திர நிகழ்வுகள் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளன. இதன் மூலம் நாங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. புதிய விவசாயிகள் பலரும் மரம் நட ஊக்கம் தருவதாக உள்ளது, நாங்களும் புதிய விவசாயிகளை மர விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கு கருத்தரங்கு பயனுள்ளதாக உள்ளது என்று ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும், காவேரி கூக்குரல் இயக்கம் டிம்பர் மரக்கன்றுகள் வழங்குவது போலப் பழமரக்கன்றுகளையும் வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இத்தகைய மாதாந்திரக் கூட்டங்கள் வரும் மாதங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு ஈஷா நாற்றுப் பண்ணைகளில் டிம்பர் மரக்கன்றுகள் ரூ.5 என்ற குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயிகளின் நிலத்திற்கே நேரடியாகச் சென்று மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுக்க இலவச ஆலோசனைகளையும் காவேரி கூக்குரல் பணியாளர்கள் வழங்கி வருகிறார்கள். மரக்கன்றுகளைப் பெறவும் ஆலோசனைகளுக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.