காதல் விவகாரத்தை கண்டித்ததால், தன்னுடைய அத்தயையே கரடி பொம்மையை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்த பத்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்புவின் மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி தமிழ்செல்வி, அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் கழுத்து நெரிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டும் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தமிழ் செல்வியின் வீட்டு அருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்செல்வி இறப்பதற்கு முன் அவரின் உறவுக்கார சிறுவன் வந்து சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிறுவன், தமிழ்செல்வியின் மகளை காதலித்து வந்ததாகவும். உறவுக்காரராக இருந்தாலும் இருவரும் சிறுவர்கள் என்பதால் இந்த காதலை கண்டித்துள்ளார் தமிழ் செல்வி. 

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருந்த அத்தை தமிழ் செல்வியை கொலை செய்ய முடிவு செய்து, முதலில் கழுத்தை நெரித்தும் பின் தமிழ் செல்வியின் முகத்தில் கரடி பொம்மையை வைத்து அமுக்கி கொலை செய்து. இவர் உயிர் தப்பித்து விட கூடாது என்பதற்காக கத்தியால் மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். 

முதலில் கொலை செய்ததை மறுத்து வந்த இந்த சிறுவன், பின்பு காதலுக்காக தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும் தற்போது போலீசார் இந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.