- Home
- Politics
- அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
‘‘திமுகவின் பிரித்தாலும் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டுள்ள சிறுபான்மையினர் இந்த ஆட்சியை வேறோடு அகற்ற வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர்’’

ஆன்மீகத்தில் பெரும் பற்று கொண்ட பூர்ணசந்திரன் குடும்பம்
‘‘திருப்பரன்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில் திமுக அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ணசந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம்’’ என அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் நேற்று முன்தினம் தல்லாகுளம் புறக்காவல் நிலையத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவும், மருத்துவர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் பா.சரவணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பூர்ணசந்திரனை இளம் வயதில் இருந்தே அறிந்த டாக்டர் சரவணன். அவரது ஆன்மீக நாட்டம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் அரசியல் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட டாக்டர் சரவணன், ‘‘பூர்ணசந்திரன் எங்களது மருத்துவமனைக்கு அருகில் வசித்து வந்தவர். அவரை 25 ஆண்டுகளாகத் தெரியும். ஒன்றை வயது முதல் என்னிடம்தான் அவர் மருத்துவ சிகைச்சைகள் பெற்று வந்தார்.
அவரது தந்தை பெரியசாமி எனது அப்பாவுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். வருவாய் துறையில் டி.ஆர்.ஓவாக பணியாற்றியவர். மிகவும் கட்டுக்கோப்பான, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட குடும்பம். பூர்ணசந்திரனின் தந்தை தனது ஊரில் சொந்தமாக சிவன் கோயில் கட்டியுள்ளார். பூர்ண சந்திரனும் ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டவர். அடிக்கடி சதுரகிரிக்கு சென்று வருவார். அதனை என்னுடனும் பகிர்ந்து கொள்வார். பூர்ண சந்திரனின் முதல் மகனுக்கு சிவனேசன் என்றும் இளைய மகனுக்கு இனியவன் என்றும் பெயர் வைத்தவர். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
மத நல்லிணக்கம் என்பது எல்லோரையும் சரிசமமாக பார்ப்பதுதான்
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கெல்லாம் இந்த அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்கிறது. அவர் தற்கொலை செய்து கொள்ள திமுக அரசுதான் காரணம். திமுக அரசு திருப்பரங்குன்றத்தில் ஹைகோர்ட் உத்தரவுப்படி நடந்து கொண்டிருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது. அந்த வகையில் பூர்ணசந்திரனை தற்கொலைக்கு தூண்டியதே திமுக அரசுதான்.
அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம். மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் வாக்குக்காகவும் திமுக அரசு இப்படி செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகதான் குற்றவாளி. உயர்நீதிமன்றம் உத்தரவி்ட்டும் திமுக அரசு அதனை நிறைவேற்ற முன் வராமல் தடுத்து நிறுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு தவறி விட்டதாக ஏற்கெனவே எங்களது பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். இத்தனைக்கும் இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
திமுகவினர் மத நல்லிணக்கத்தை காக்கிறோம் என்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பது எல்லோரையும் சரிசமமாக பார்ப்பதுதான். மத நல்லிணக்கம் எனக்கூறி மக்களைப் பிரித்தாண்டு சூழ்ச்சி செய்து திமுக ஓட்டு அரசியல் நடத்தி குளிர்காய்கிறது. ஆனால், இங்குள்ள மக்களான இஸ்லாமியர்களும், இந்துக்களும் சுமூகமாக, நட்புடன் வாழ்ந்து வருகிறார்கள். நான் இந்தத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன். இஸ்லாமியர்கள் நடத்தும் சந்தனக்கூடு விழாக்களில் பலமுறை கலந்து கொண்டுள்ளேன். அனைத்து மக்களும் பேதமின்றி கலந்து கொள்வார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை திமுக அரசு சரியாகக் கையாளவில்லை.
பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக்கூறும் திமுகவினர்
கோயில் மேலே உள்ள தூண் பற்றி அரசுக்கு தெளிவில்லை. முன்பு மலை மேல் உள்ளது தீபத்தூண் அல்ல, சர்வே கல் தான் எனக் கூறினார்கள். அடுத்து நீதிமன்றத்தில் மலை உச்சியில் உள்ளது சமணர் கால தூண் என்கிறார்கள். 1908 களில் இருந்து மக்கள் அந்தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்துள்ளார்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் இஸ்லாமியர்களும் அங்குள்ள தர்ஹாவில் சந்தனக்கூடு வழிபாடு நடத்தி வருகிறார்கள். திருப்பரங்குன்றம் மலையில் இருதரப்பினருகும் எந்த சங்கடங்களும் இல்லாமல் வழிபாடு நடத்தி வருகிறார்கள். ஆனால், திமுக அரசுதான் சிறுபான்னமையினரின் பாதுகாவலனாக வேடமிட்டு அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறது. அதை சிறுபான்மை மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள். திமுகவின் செயல்பாடுகளை உணர்ந்துள்ள மக்கள் இந்த அரசுக்கு எதிராக நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறார்கள்.
பூர்ணசந்திரனின் தற்கொலை தொடர்கதையாகி விடக்கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடக்கக்கூடாது. பூர்ணசந்திரன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக திமுகவினர் கூறுகின்றனர். 2026ல் தீபம் ஏற்றவேண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என அவரது ஆடியோ பதிவில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். அப்படி இருக்கையில் கடன் தொல்லையால் இந்த முடிவை பூர்ணசந்திரன் எடுத்துள்ளார் என திமுகவினர் திரித்துக் கூறுகின்றனர். யாருக்குத்தான் கடன் இல்லை? பூர்ண சந்திரனின் இறப்பை உபீஸ்கள் சோசியல் மீடியாக்களில் விமர்சிக்கின்றனர்.
திமுக அனிதா மரணத்தை தடுத்திருக்கலாமே..?
அனிதா நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதற்காக அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறுவார்களா? திமுகதான் நீட் விவகாரத்தில் அனிதாவை நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்று போராட வைத்தது. அனிதாவுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவரது தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே.
சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு நிறைய நலத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆட்சி காலங்களில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். திமுகவின் பிரித்தாலும் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டுள்ள சிறுபான்மையினர் இந்த ஆட்சியை வேறோடு அகற்ற வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.
