காவரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

காவிரி பிரச்சனை- உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனையடுத்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் தங்கள் மாநிலத்தில் போதிய தண்ணீர் இல்லையென்றும், குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாக தெரிவித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்தது.

 இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனை எதிர்த்த கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.

பெங்களூரில் பந்த்- லாரிகள் இயக்க தடை

இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த அறிவுறுத்தியது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தவிற்கு எதிராக இன்று பெங்களூரில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளை தாக்குவதும், கண்ணாடிகளை உடைப்பதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு லாரிகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்தநிலையில் பெங்களூரில் இன்று பந்த் நடத்த போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க பெங்களூரில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்று வழக்கம்போல் பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி பஸ்கள், மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் இன்று ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இன்று பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது 

இதையும் படியுங்கள்

பெங்களூரு பந்த்: என்னவெல்லாம் இயங்கும்? என்னவெல்லாம் இயங்காது?