பெங்களூரு பந்த்: என்னவெல்லாம் இயங்கும்? என்னவெல்லாம் இயங்காது?
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதை கண்டித்து பெங்களூருவில் வருகிற 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதை கண்டித்து பெங்களூருவில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் வருகிற 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மாநில தலைநகரில் பல அத்தியாவசிய சேவைகளை பாதிக்கும் என தெரிகிறது. இதையடுத்து, இந்த வாரத்தில் இரண்டாவதாக வருகிற 29ஆம் தேதி மீண்டும் ஒரு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, சாந்தகுமார் குருபுரு தலைமையில் நாளை நடைபெறவுள்ள பந்திற்கு 92 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வாட்டாள் நாகராஜ் கட்சி உட்பட 20க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவு அமைப்புகள் வருகிற 29ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த முடிவு செய்துள்ளன. அடுத்தடுத்து நடைபெறவுள்ள இந்த முழு அடைப்பு போராட்டங்கள், விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவுக் குழுக்களிடையே காவிரிப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோ, டாக்ஸி சேவைகள் உட்பட பல தொழில்கள் முடங்குவதற்கான வாய்ப்புள்ளதால், பரபரப்பான பெங்களூரு நகரத்தை இந்த பந்த் ஸ்தம்பிக்க வைக்கும். இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில், பந்த் தொடர்பான குழப்பத்தை தீர்க்க இன்று முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு சாந்தகுமாருடன் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட ஆதரவு அமைப்புகளும் அழைக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்திற்கு பின்னர், இரு பிரிவினரும் ஒரே நாளில் பந்த் நடத்துவார்களா அல்லது பெங்களூரு வாசிகள் ஒரே வாரத்தில் இரண்டு தனித்தனி முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்வார்களா என்பது தெரியவரும்.
என்னென்ன சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது?
** பிஎம்டிசி பேருந்துகளின் சேவை பகுதியளவு பாதிக்க வாய்ப்புள்ளது
** ஓலா - உபெர் சேவைகள் இயங்காது
** APMC ஊழியர்களின் ஆதரவால் சந்தைகள் பாதிக்கப்படும்
** நகைக்கடைகள் மூடப்படும். திரைப்படம் மற்றும் நாடகங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும்
** தனியார் பள்ளிகள் போதுமான அளவில் செயல்படாமல் இருக்கலாம்
அயோத்தி ராமர் கோயிலில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட தாமரை வடிவ நீரூற்று!
என்னென்ன இயங்க வாய்ப்புள்ளது?
** ஹோட்டல்கள்
** பள்ளி-கல்லூரிகள்
** மருந்து கடைகள்
** KSRTC பேருந்துகள் ஓரளவு இயங்க வாய்ப்புள்ளது
** அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கும் பொருட்டு சில சந்தைகள் இயங்க வாய்ப்புள்ளது
பெங்களூரு பந்த் முக்கிய அம்சங்கள் என்ன?
** செப்டம்பர் 26ஆம் தேதி காலை 11 மணிக்கு டவுன்ஹாலில் இருந்து மைசூர் வங்கி வட்டம் வரை மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெறவுள்ளது
** காவேரி நீர் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
** தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்
இரண்டு முழு அடைப்பு போராட்டங்களை தவிர்க்கும் வகையில், இரு கோஷ்டிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, சர்ச்சைக்குரிய காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.