மானாமதுரை,

மானாமதுரையில் உள்ள இரயில்வே கேட்டில் வந்த திருச்சி – இராமேசுவரம் இரயில் முன்பு பாய்ந்து 14 வயது சிறுவன் தற்கொலைச் செய்துக் கொண்டான்.

மானாமதுரை அருகேயுள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செங்குட்டுவன். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகன் செல்வகணேஷ் (14), மானாமதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு முடிந்தவுடன் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட பின்னர் செல்வகணேஷ் பள்ளிக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில் வீட்டில் பெற்றோர் பள்ளிக்குச் செல்லுமாறு கூறினர். இதனையடுத்து செல்வகணேஷ் நேற்று காலை பள்ளிக்குப் புறப்பட்டான்.

ஆனால், அவன் பள்ளிக்குச் செல்லாமல் மானாமதுரை அண்ணாசிலை அருகே உள்ள இரயில்வே கேட் அருகே வந்தான். அப்போது அந்த வழியாக வந்த திருச்சி – இராமேசுவரம் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை இரயில்வே காவலாளர்கள் மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.