மதுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 137 வருட பழமையான கால்வாயை கேரளா பராமரித்து நீர்வழிப் போக்குவரத்தை மேற்கொள்கிறது. ஆனால், தமிழகம் ஏன் பராமரிக்கவில்லை என்றும், அதனை தூர்வாரக்கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ஓ.ஓமர்லால், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:–

“திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கன்னியாகுமரி இருந்த சமயத்தில், அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜா, இங்கிலாந்து ராணியின் நண்பராக இருந்தார்.

இந்த நட்பின் காரணமாக திருவனந்தபுரம் முதல் மண்டைக்காட்டுபுதூர் வரை கடற்கரையோரம் 1860–ம் ஆண்டில் நீர்வழிப் போக்குவரத்து கால்வாய் ஏற்படுத்த இங்கிலாந்து ராணிகள் அலக் ஆண்டிரினா, விக்டோரியா ஆகியோர் உதவி செய்தனர்.

இந்த கால்வாய் அமைக்கும் பணி 1880–ல் நிறைவடைந்தது.

முதலில் கன்னியாகுமரி வரை இந்த கால்வாயை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் மண்டைக்காடு பகுதியுடன் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த கால்வாய் அனந்தன் விக்டோரியா மார்த்தாண்டவர்மா கால்வாய் (ஏவிஎம் கால்வாய்) என்றழைக்கப்படுகிறது.

மண்டைக்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை இந்த கால்வாய் வழியாக பல ஆண்டுகள் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவுக்கு கூட திருவனந்தபுரத்தில் இருந்து இந்த கால்வாய் வழியாக பலர் வந்து சென்றுள்ளனர்.

பின்னர் போதிய பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் மண் நிரம்பியதுடன், ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதனால் அந்த கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடற்கரையோரம் அமைக்கப்பட்ட இந்த கால்வாய் கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடாமலும், ஊர் பகுதியில் உள்ள நன்னீருடன் கடல் நீர் கலக்காமலும் தடுத்து வந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் வரை இந்த கால்வாய் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. தமிழகத்துடன் சேர்க்கப்பட்ட பிறகு பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.

அதே நேரத்தில் அந்த கால்வாயின் ஒரு பகுதி கேரளா எல்லைக்குள் வருகிறது. அதனை முறையாக பராமரிக்கப்பட்டு இப்போதும் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நீர்வழிப் போக்குவரத்துக்கு குறைந்தளவு எரிபொருள் போதுமானது. எனவே தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் இந்த கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் மீண்டும் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்க முடியும்.

இந்த கால்வாய் ரூ.1211 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால் இதுவரை எந்தப்பணியும் நடைபெறவில்லை.

நாளுக்கு நாள் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே கொல்லங்கோடு நீரோடி முதல் மண்டைக்காடு புதூர் வரை 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த கால்வாயை தூர்வார உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஹெரால்டுசிங் ஆஜரானார்.

விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்தனர்.