1300 years old stone discovery in private estates ... the decision to pursue studies ...

சேலம் 

ஆரிராசன் காடு என்ற தனியார் எஸ்டேட்டில் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், சுகவனமுருகன், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீரமணி ஆகியோர் அடங்கிய குழு ஏற்காடு செம்மநத்தம் அருகே உள்ள ஓலக்கோடு என்ற இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அப்போது, ஆரிராசன் காடு என்ற தனியார் எஸ்டேட்டில் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடுகல் குறித்து ஆராய்ச்சியாளர்கள், "பழங்காலம் முதற்கொண்டே ஆநிரையை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. 

தொல்காப்பியம் என்ற நூல் ஆநிரைப்போரை பூசல் என குறிப்பிடுகிறது. கால்நடைகளே அப்போது மக்களின் பெரும் சொத்தாக இருந்துள்ளது. 

ஓலக்கோடு பகுதியில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் ஆநிரைப்போரின்போது பசுக்களை காத்து போரிட்டு இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும். இந்த நடுகல்லானது ஒரு பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. 

100 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் உள்ளதாக நடுகல் உள்ளது. துவிபங்க நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். இடது பக்கம் திரும்பிய நிலையில் முகம், வலது கையில் குறு வாள், இடது கையில் நீண்ட வில்லுடன் வீரன் உள்ளான். கையில் காப்பு, இடையில் அரையாடை, பாதங்கள் இரண்டும் இடது பக்கம் திரும்பி போருக்கு விரைந்து செல்லும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். 

வீரனுக்கு மேல்புறமும், இடது புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. எழுத்துக்கள் வட்டெழுத்தால் எழுதப்பட்டுள்ளன. எழுத்தை கொண்டு இவை 6 அல்லது 7-ம் நூற்றாண்டு என முடிவு செய்யலாம். மொத்தம் 14 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. 

தமிழக தொல்லியல் துறையில் இணை இயக்குனராக பணியாற்றிய பூங்குன்றன், கல்வெட்டு ஆய்வாளர் கோவை து.சுந்தரம் ஆகியோர் மூலம் கல்வெட்டானது படிக்கப்பட்டது. 

"சிரி வலிகையார்" என கல்வெட்டு தொடங்குகிறது. மன்னர் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் இந்தப்பகுதியானது சுதந்திரமாக செயல்பட்டதை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. தகினூர் என்ற ஊர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

ஆயளூர் என்ற ஊரை சேர்ந்த வீரன் ஒருவன் ஆநிரை கூட்டத்தை கவர வந்தவர்களுடன் போரிட்டு உயிர் இழந்துள்ளான். அந்த வீரனுக்காக வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும். இந்த நடுகல்லானது மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

ஏற்காடு பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்" என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.