கோவை புறநகரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு112 அடி கொண்ட பிரமாண்ட ஆதியோகி சிலை நிறுவப்படுகிறது. உலக அளவில், பெரிய அளவிலான சிவபெருமானின் ஆதிரூப தோற்றத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.
இந்த சிலை திறப்புவிழா வரும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
மாநில முதலமைச்சர்கள் வசுந்தரா ராஜே சிவராஜ் சிங் சவுகான், தேவேந்திர பத்னாவிஸ் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடியின் கோவை வருவதையொட்டி, கோவை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூலூர் விமான நிலையம் முதல் வெள்ளியங்கிரி மலைப்பகுதி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகிது.
கோவை, ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

சூலூர், ராணுவ விமானப்படை தளம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஈஷா யோகா மையம் செல்கிறார். இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதற்காக, பிரதமரின் தனி பாதுகாப்பு படை பிரிவு ஐ.ஜி. பியூஸ் பாண்டே கோவைவந்துள்ளார்.

ஈஷா யோகா மையம் சென்ற அவர், பிரதமர் வரும் வழித்தடம், பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடக்கும் இடம், அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல், சூலூர் விமானப்படை தளத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது.
