சேலம்

மு.க.ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 1200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டியில் கச்சராயன்குட்டை ஏரி உள்ளது.

முப்பது ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் விவசாயிகள், மக்களுக்கு பயனின்றி கிடந்த கச்சராயன்குட்டை ஏரியை சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் அப்பகுதி விவசாயிகள் இணைந்து 20 நாள்களாக தொடர்பணி செய்து ஏரியின் கரையை பலப்படுத்தி சீரமைத்தனர்.

இந்த ஏரியை பார்வையிட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வருவதாக இருந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால், அ.தி.மு.க.வினரும் கச்சராயன்குட்டை ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு அ.தி.மு.க. விவசாய அணியினர் வண்டல்மண் எடுத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனிகிடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் காரணமாக கச்சராயன்குட்டை ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் நேற்று தெரிவித்தார்.

மேலும், சங்ககிரியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் கெமிக்கல்பிரிவு சாலையில் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் தடை ஏற்படுத்தி 200-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். வருவாய்த்துறை தரப்பில் சங்ககிரி உதவி ஆட்சியர் ராம.துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சராயன்குட்டை ஏரியை பார்வையிடுவதற்காகவும், ‘நீட்‘ தேர்வுக்கு எதிராக சேலம் மாநகரில் நடக்க இருந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வந்து கொண்டிருந்தார். கோவை அடுத்த கனியூரில் வந்தபோது, காரை தடுத்து நிறுத்திய காவலாளர்கள் மு.க.ஸ்டாலினை கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அறிந்த தி.மு.க.வினர் சங்ககிரி - கொங்கணாபுரம் பிரிவு சாலையில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் சாலை மறியல் செய்தனர்.

கைதான மு.க.ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி அரசின் அராஜக போக்கை கண்டிப்பதாகவும், காவல்துறையானது ஏவல்துறையாகி விட்டதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, வரதராஜன், தமிழ்ச்செல்வன், சின்னதுரை, கோபால், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் மாணிக்கம், பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், பரமசிவன், நிர்மலா, பேரூர் கழக செயலாளர் முருகன் மற்றும் பாரப்பட்டி குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கமணி, சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத், சுந்தரம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 1200 பேரை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களை பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் ஏற்றி சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.ஆர்.எம். திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.