Asianet News TamilAsianet News Tamil

ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 120 வீடுகள் இடித்து தரைமட்டம்..,

120 houses built and occupied by the river ares were demolished ...
120 houses built and occupied by the river ares were demolished ...
Author
First Published Feb 22, 2018, 10:13 AM IST


கடலூர்

கடலூரில், கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகள் பலத்த காவல் பாதுகாப்புடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.

கடலூர் மாவட்டம், ஓட்டேரியில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 22 கிலோ மீட்டர் தூரம் கெடிலம் ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணி ரூ.22½ கோடி செலவில் பொதுப்பணித்துறையினர் மூலம் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 300-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. இந்த நோட்டீசை பெற்ற அவர்கள் தங்களுக்கு மாற்று இடத்தை நகராட்சி பகுதியிலேயே வழங்க வேண்டும் என்றும் அதுவரை வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 கடைகள் இடிக்கப்பட்டன. மேலும, வீடுகளை இடிக்க அதில் உள்ள மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டிக்க வந்தனர். அவர்களை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல நேற்று முன் தினமும் மின் இணைப்பை துண்டிக்க வந்த மின்வாரிய ஊழியர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த உதவி ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துவிட்டு சென்றார்.

அதன்பிறகு ஆக்கிரமித்து கட்டியுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.

அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க அந்த பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலூர் தரைக்காத்த காளியம்மன்கோவில் வழியாக புதுப்பாளையம் செல்ல காவலாளர்கள் தடை விதித்து தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தனர்.

மதியம் வரை வாகனங்கள் செல்ல காவலாளர்கள் தடை விதித்தனர். அதன்பிறகு பிரச்சனை ஏதும் நடைபெறாததால் வாகனங்கள் சென்று வர காவலாளர்கள் அனுமதித்தனர்.

பின்னர், நேற்று வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் பொக்லைன் எந்திரங்களுடன் வந்து ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.

ஒரு சிலர் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து காலி செய்து கொடுத்தனர். அந்த வீடுகளை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரத்தை வைத்து இடித்து தரை மட்டமாக்கினர்.

பொருட்களை காலிசெய்யாமல் இருந்த வீட்டை இடித்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர், அந்த வீட்டில் இருந்த பொருட்களை அவர் எடுத்த பிறகு அந்த வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios