"தமிழகத்தில் 12  மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசர கால தாய், சேய் சிகிச்சைப் பிரிவு கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

“மொத்தம் 12 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு தடுப்பு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்றபோதும், அவர்களுக்கான மருத்துவ குறிப்பில் வைரஸ் காய்ச்சல் என்றுதான் குறிப்பிடப்பட்டு வந்தது. அதே நோயாளிகள் வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது 'டெங்கு' என மருத்துவக் குறிப்பில் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போதுதான் முதன்முறையாக, 'தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ளது' என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.