தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பதினோராம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

ஏற்கனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி வரும் நிலையில், வரும் ஆண்டு முதல் பதினோராம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.

பதினோராம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பினை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழக அரசு அறிவித்த பதினோராம் வகுப்பு தேர்வும், பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது அவசியமற்றது என்றும், பத்தாம் வகுப்பில், அதிகமான மதிப்பெண்களைப் பெற மாணவர்கள் உறக்கமின்றி கடினமாக உழைப்பதாகவும், 10, 11, 12 என 3 ஆண்டுகளும் பொதுத் தேர்வுக்காக கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாவர்கள்.

எனவே, பதினோராம் வகுப்பு தேர்வையும், பொதுத் தேர்வாக, நடத்த வழி வகுக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பதினோராம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டே பதினோராம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று கூறியிருந்தது.

தற்போதுள்ள தகுதி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன என்றும், அண்ணா பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஆலோசனைக்கு பிறகே பதினோராம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு அறிவித்தது என்றும் அதில் கூறியிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், உயர் கல்வியின் முதலாம் ஆண்டில் பெரும்பாலான பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாத நிலை உள்ளது என்றும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.