விழுப்புரம்

விழுப்புரத்தில் அரசு ஆதி திராவிடர் விடுதியில் பல்லி விழுந்த இரவு உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆதி திராவிடர் மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது.

இந்த விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடிரென மயங்கி விழத் தொடங்கினர். உணவைச் சாப்பிட்ட ஏழாம் வகுப்பு மாணவர் பூவரசு, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சிவா, சக்தி, ராஜேஷ் உள்ளிட்ட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்களுக்கு ஃபுட் பாய்சன் என்று கூறியதை அடுத்து விடுதியில் உணவை சோதித்துப் பார்த்தனர். அப்போது மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு விடுதி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் நேரு, கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் ஜெமினி, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர்.

சிகிச்சைக்குப் பின்னர், மாணவர்கள் அனைவரும் விடுதிக்கு நல்லபடியாக திரும்பினர்.