நாமக்கல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 1092 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி தலைமை வகித்தார். இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை சங்கப் பொருளாளர் லோக மணிகண்டன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் சாலை மறியல் செய்ய முயற்சித்தபோது இராசிபுரம் காவலாளார்கள் 150 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதேபோன்று, குமாரபாளையத்தில் 109 பேர், பரமத்தி வேலூரில் 96 பேர், திருச்செங்கோட்டில் 227 பேர், சேந்தமங்கலத்தில் 55 பேர், கொல்லிமலையில் 155 பேர், நாமக்கல்லில் 300 பேர் என மொத்தம் 1092 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.