வேளாண் விற்பனை மைய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு வைக்கப்பட்டு இருந்த 1000 டிவிக்கள் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வேளாண்மை உற்பத்தி விற்பனை மையம் மற்றும் விவசாயிகள் பயிர் செய்த உணவு தானியங்களை சேமிக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு அருண் என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியின்போது தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவச டிவிக்கள் வழங்கப்பட்டன. அதில், பகுதி வாரியாக கொடுக்கும் நேரத்தில், மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்ததால், டிவி வினியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த டிவிக்கள், மேற்கண்ட குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் டிவிகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. காற்று பலமாக வீசியதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும், புகை மண்டலமுமாக காட்சியளித்தது.

சிறிது நேரத்தில், குடோனில் இருந்து டிவிக்கள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டது. திடீரென தீப்பற்றி எரிந்து, மளமளவென பரவியது. இதனால், அங்கு பணியில் இருந்த காவலாளி அருண் அதிர்ச்சியடைந்தார். இந்த சத்தமும், கரும்புகையால் தூக்கத்தை இழந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தனர். குடோனில் தீ வேகமாக பரவி எரிந்து கொண்டிருந்தது.

தகவலறிந்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து அதிகாரி கணேசன் தலைமையில் வீரர்கள் 2 வாகனங்களில் சென்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால், குடோனில் வைக்கப்பட்டு இருந்த டிவிக்கள் வெடித்து சிதறின. இதனால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர்.

பின்னர், பொக்லைன் மூலம் குடோனின் சுவரை இடித்து தள்ளிய வீரர்கள், நவீன உடை அணிந்து கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த பயங்கர தீ விபத்தில் குடோனில் இருந்த 1000 இலவச டிவிக்கள் வெடித்து சிதறி நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.