தஞ்சையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 1000 ரூபாய் கொடுத்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் மீண்டும் 500 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சாதாரண மக்களும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைக்குச் சென்றபோது 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் தஞ்சையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

500, 1000 என பணம் இருந்தும் பலர் கடனுக்கு பொருட்களை வாங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டது. ஒரு சிலர் பொருட்கள் வாங்காமல் திரும்பி சென்றனர்.

மேலும் டீக்கடை, பெட்டிக்கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகளிலும் ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்துவிட்டனர்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வரை 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தஞ்சையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

பெட்ரோல் போட சென்ற மக்கள் அங்கு இந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் போட ரூ.500 கொடுத்தால் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். சிலர் வேறு வழியேதும் தெரியாததால் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுச் சென்றனர்.

சில்லறை மாற்றுவதற்காக 1000 ரூபாய் கொடுத்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட சிலருக்கு மீண்டும் 500 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர்.

தஞ்சை கீழவாசல் பகுதியில் ஒரு சிலர் 500 ரூபாய் கொடுத்தால் 50 ரூபாய் கமிஷன் எடுத்து கொண்டு 450 ரூபாய் கொடுத்தனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமே என்பதற்காக கமிஷனை கொடுத்து விட்டு சில்லறை மாற்றி சென்றனர்.

தஞ்சை இரயிலடியில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப் படமாட்டாது என விளம்பர பலகையில் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக பெரும்பாலானோர் 500 ரூபாயை கொடுத்தனர். 500 ரூபாய்க்கும் மது வாங்கியவர்களிடம் அந்த நோட்டை கடை ஊழியர்கள் வாங்கி கொண்டனர்.

சில்லறையாக வாங்க வந்தவர்களிடம் மதுக்கடை காரர்கள் வாங்க மறுத்து விட்டனர்.