நாகப்பட்டினம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடியில் மார்ச் 28 முதல் நடைபெற  உள்ள மாநில மாநாட்டில் கீழையூர்  ஒன்றியத்திலிருந்து  ஆயிரம் பேர்  பங்கேற்க முடிவெடுத்துள்ளனர் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம்  நடைப்பெற்றது.  

இந்தக் கூட்டத்திற்கு ஒன்றியத் துணைச் செயலர் சுப்பிரமணியன்  தலைமை தாங்கினார்.  ஒன்றியச் செயலர்  டி.செல்வம் மன்னார்குடியில்  நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து இதில் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. சீனிவாசன்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் டி. கண்ணையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் கே. சீனிவாசன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர். பரமானந்தம்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், "2016 - 17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகையை கீழையூர் ஒன்றியத்தில் விடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல்  வழங்க வேண்டும். 

தவறும் பட்சத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் நாகையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது. 

விவசாயிகளின்  உரிமைகளை  நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை  அமைக்க  வலியுறுத்தியும்  மன்னார்குடியில் மார்ச் 28 முதல் 31- ஆம் தேதி வரை  நடைபெற  உள்ள மாநில மாநாட்டில் கீழையூர்  ஒன்றியத்திலிருந்து  ஆயிரம் பேர்  பங்கேற்பது " போன்ற தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.