100 workers arrested for asking relief work
திருவாரூர்
வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவாரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு போராடிய கட்டுமானத் தொழிலாளர்கள் 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான (சி.ஐ.டி.யூ.) கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் இராமலிங்கம், நகர அமைப்பாளர் பாலு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பாண்டியன், பொறியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் செல்வகணபதி, பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் சண்முகம் ஆகியோர் பேசினர்.
இந்தப் போராட்டத்தில், "வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் மணல் இறக்குமதி செய்து குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக அணைகளில் நீரில்லா காலங்களில் அதில் கிடைக்கும் மணலை எடுத்து விநியோகம் செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளார் கபிலன் ஆகியோர் கைது செய்தனர்.
