100 people arrested for selling banned tobacco products
அரியலூர்
அரியலூரில் நடந்த அதிரடி சோதனையில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற 100 பேரை காவலாளர்கள் ஒரே நாளில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பண்டல் பண்டலாக புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள் போன்ற பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் தலைமையில் காவல் குழு ஒன்றை அமைத்தார்.
தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள், இரண்டு பேரூராட்சிகள், 201 கிராம ஊராட்சிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை நடத்துமாறு உத்தரவிட்டார்.
அந்தச் சோதனையின்போது தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
அதேபோன்று, அரியலூர் பேருந்து நிலையம், இராஜாஜி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட அரியலூர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டு சாமிநாதன், சகாயம், பிரதாப்சிங், சதீஷ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது. அதன்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக 100 பேரை காவலாளர்கள் ஒரே நாளில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பண்டல் பண்டலாக புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
