10 thousand acres of crops scorching farmers sad
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீரின்றி 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கடைமடைப் பகுதியான திருமருகல் ஒன்றிய பகுதியில் உள்ள முடிகொண்டானாறு, திருமலைராஜனாறு, அரசலாறு, வடக்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணியாறு,
தெற்கு புத்தாறு, ஆழியானாறு, வளப்பாறு பிராவடையானாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசனம் பெற்று சுமார் 13 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
ஒவ்வொரு வருடமும் வழக்கமாக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால், கடந்த சில வருடங்களாக மேட்டூர் அணையில் காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், பருவ மழை பொய்த்து போனதாலும் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த வருடமும் மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறந்து விட்டதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடியை காலதாமதமாகத் தொடங்கினர்.
பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் பருவமழைத் தொடங்கியதால் வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பின்னர், வயலில் இருந்த தண்ணீரை வடித்து விவசாயிகள் மீண்டும் நடவு பணியில் ஈடுபட்டனர்.
திருமருகல் பகுதியில் தண்ணீரின்றி பயிர்கள் பாதிக்கப்பட்டதால் காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், கடைமடை பகுதிக்கு போதிய தண்ணீர் வரவில்லை. இதனால், ததால் திருமருகல் பகுதியில் பயிர்கள் கருகி வருகின்றன.
சில இடங்களில் விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் திருமருகல், சீயாத்தமங்கை, பண்டாரவாடை, தென்பிடாகை, குருவாடி, அண்ணாமண்டபம், புதுக்கடை, தெற்குலேரி,
திருப்புகலூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, இடையாத்தங்குடி, கணபதிபுரம், சேஷமூலை, கிடாமங்கலம், பொறகுடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீரின்றி 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகியது.
பல்வேறு இடங்களில் தண்ணீரின்றி 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
