பணியிட மாற்றத்திற்காக தன் தந்தையிடம் ரூ. 10 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தருமபுரியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீனாட்சி பணியிட மாற்றத்திற்காக அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

தருமபுரியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்ய குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரி மீனாட்சியை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்து ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மீனாட்சி கூறியதாவது:

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா என்னிடம் பணி நிரந்தரம் மற்றும் பணியிட மாற்றத்திற்காக 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்.

பணியிட மாற்றத்திற்காக எனது தந்தையை அணுகி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.

மேலும் பணம் வேண்டும் என்று என்னை வீட்டுக்கே வரவழைத்து அசிங்கமாக திட்டி மிரட்டினார்.

ஒரு பெண் அமைச்சர் இந்த அளவுக்கு பேசுவாரா என்ற அளவுக்கு பேசினார்.

நீயாக வேலையை விட்டு ஓடிவிடு இல்லை என்றால் நீ ஓடும் வரை நெருக்கடி கொடுப்பேன் என அமைச்சரும் அவரது கணவரும் என்னை மிரட்டினர்.

வேலையை நீ ராஜினாமா செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என அமைச்சர் சரோஜா மிரட்டினார்.

என்னிடம் உள்ள ஆதாரங்கள் அடிப்படையிலேயே தற்போது  புகார் அளித்துள்ளேன். ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

சத்துணவு பணியில் ரூ. 2.50 லட்சம் வரை லஞ்சம் வாங்குகிறார்கள்.

எக்காரணத்தை கொண்டும் வேலையை ராஜினாமா செய்ய மாட்டேன். எனது வாழ்க்கைக்கு பாதுகாப்பு வேண்டும். மேலும் எனது வேலைக்கும்  பாதுக்காப்பு வேண்டும்.

தனது புகரை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றுவதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.