Asani : தாண்டவமாடும் அசானி புயல்.. பேருந்து,ரயில் சேவையை தொடர்ந்து.. விமான சேவையும் ரத்து.!!
Asani : வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயல் அசானி, கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து இன்று இரவு வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொள்ளும்.
அதன்பிறகு திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து, ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக சென்னை வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானங்கள் ரத்து பற்றிய தகவல்களை பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் நேற்று மாலையே கொடுத்துவிட்டதால், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து அவதிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.