வெட்கக்கேடு..! தமிழகத்தின் 445 கிராமங்களில் சாதிக் கொடுமை.. தீண்டாமை இருக்கும் டாப் 10 ஊர்கள் எவை? பகீர் தகவல்
தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் கடைப்பிடிக்கப்படும் முதல் 10 மாவட்டங்கள் பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக், தமிழ்நாட்டில் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு, 2021ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், 43 கிராமங்களுடன் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாமிடத்தில் உள்ள விழுப்புரத்தில் 25 கிராமங்களிலும், மூன்றாமிடத்தில் உள்ள நெல்லையில் 24 கிராமங்களிலும் தீண்டாமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் 19 கிராமங்களிலும், திருவண்ணாமலையில் 18 கிராமங்களிலும் தீண்டாமை இன்னும் நீடிக்கிறது. இந்த பட்டியலில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. சென்னைக்கு முன்னதாக விருதுநகரில் 12, பெரம்பலூரில் 11, ராமநாதபுரத்தில் 10 என்ற எண்ணிக்கையில் தீண்டாமை கிராமங்கள் உள்ளன. தீண்டாமையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு, 341 கிராமங்களில் தீண்டாமை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக பதில் தரப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில், அதிகபட்சமாக 597 விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதத்தில் 212 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் உள்ள மதுரை மாவட்டத்தில் வெறும் 3 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
சாதிய தீண்டாமை பாகுபாட்டை ஒழிப்பதற்காக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு என தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்படுவது இல்லை எனவும், பாதிக்கப்பட்ட நபர்களிடம் மனு பெற்று அரசுக்கு அனுப்பி நிவாரணம் வாங்கி கொடுப்பது என்ற அளவில் இத்துறை இயங்கி வருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2009 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில் 27 சதவீதம் அளவுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்துள்ளன.
எனவே, தீண்டாமை நிலவும் கிராமங்களை கண்டறிந்து, இருதரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.தீண்டாமை வன்கொடுமை தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் நடைபெறுவது குறித்தும், குறிப்பாக மதுரை மாவட்டம் அதில் முதலிடத்தில் இருப்பது குறித்தும் வெளியான இந்த ஆர்டிஐ தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.