பயணச்சீட்டு இருந்தும் அபராதம் போடுவீங்களா? பெண் பயணியின் ஆவேசத்தால் திக்கு முக்காடிய பரிசோதகர்கள்
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் பயணச் சீட்டு இல்லை என்று கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் அப்பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி மற்றும் அவரது கணவர், மாமியாரோடு உளுந்தூர்பேட்டை வரை பேருந்தில் பயணச்சீட்டு பெற்று வந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில், பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது பயணச்சீட்டு ஆய்வாளர்கள் இருவர் பயணச் சீட்டுகளை பரிசோதித்துள்ளனர்.
அப்போது மூவரின் பயணச்சீட்டும் அவர் கையில் வைத்திருந்த பையில் வைத்துவிட்டு, பின்னர் அதனை பயணி மறந்துள்ளார். அதனை தேடும் போது பயணச்சீட்டு இல்லை என கூறி அவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு பணம் இல்லை 500 ரூபாய் தான் இருக்கின்றது என தெரிவித்ததால் 500 ரூபாயை மட்டும் அபராதமாக செலுத்துங்கள் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வேறு வழியின்றி தனக்கான அபராதத்தை செலுத்தி உள்ளார்.
அதிகாரிகள் 500 ரூபாய்யை பெற்றுக் கொண்ட நிலையில், அடுத்த நிமிடமே கைப்பையில் வைக்கப்பட்டிருந்த பயணத்திற்கான சீட்டு அவர்கள் கையில் சிக்கியது. இதனைத் தொடார்ந்து பெண் பயணி ஆய்வாளரிடம் முறையிட்டு உங்களுக்கு தேவையான பயணச்சீட்டு கிடைத்துவிட்டது. எனக்கான அபராதத்தை ரத்து செய்து என் பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி நடத்துநர், பரிசோதகரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
நாகூர், வேளாங்கண்ணில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மனித கடவுள்
இதனால் அங்கு கூடிய சக பயணிகளும், பொதுமக்களும் பெண் பயணிக்கு ஆதரவாக குரல் எழுப்பவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிசோதகர்கள் இருவரும் முழித்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி பரிசோதகர்கள் அபராதத் தொகையை மீண்டும் பயணிடம் கொடுத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.