அசைவின்றி கிடக்கும் சுஜித்..! தீவிர முயற்சியில் மீட்புப்படையினர்..!
ஆழ்துளைக்கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்க அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து போராடி வருகின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மனைவி கலாமேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் சுஜித் என்கிற மகன் இருக்கிறான்.
பிரிட்டோவிற்கு சொந்தமான நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் போடப்பட்டிருக்கிறது. அது சரியாக மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விட்டான். இதனால் பதறிப்போன சுஜித்தின் பெற்றோர் செய்வதறியாது கதறித்துடித்தனர்.
உடனடியாக அரசு சார்பில் குழந்தை மீட்பதற்கான மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டது. 15 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை உயிருடன் வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றது. தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது,கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப்பணி நடைபெறுவதாகவும் கூறினார். குழந்தை 70, 80 அடியில் இருந்தாலும் மூச்சு விடும் சத்தம் கேட்டதாக கூறிய அமைச்சர், காலை 5.30 மணிக்கு மேல் குழந்தை மூச்சுவிடுவதையும் உடல் நிலையையும் கணிக்க முடியவில்லை என்றார்.
மேலும் அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து குழந்தை சுஜித்தை பத்திரமாக மேலே கொண்டுவர போராடி வருவதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டு வா மகனே சுர்ஜித்..! தமிழகமே ஏங்குகிறது..!