திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித். குழந்தையின் பெற்றோர் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் தோண்டியிருக்கின்றனர்.

நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். இதையடுத்து குழந்தையை மீட்கும் பணிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் குழந்தை தற்போது 68 அடி ஆழத்திற்கு கீழே சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனினும் குழந்தையை உயிருடன் மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தை சுர்ஜித் நலமுடன் தன் தாயிடம் சேர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே பிராத்தித்து வருகிறது. இதற்காக Save Surjith , Pray For Surjith போன்ற ஹஸ்டேக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. சிறுவன் மீட்கப்படும் வரை அவனது பெற்றோர்களுக்கு மனவுறுதியை இறைவன் அருள வேண்டும் என்றும் அனைவரும் பிராத்தித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்,பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தை சுர்ஜித்திற்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.