தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு!
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்வில் இதற்கான விருதை முதல்வா் ஸ்டாலின் வழங்கவுள்ளார்
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாடங்களில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்கவிள்ளார். மேலும், சுதந்திர தினத்தன்று பல்வேறு துறை சார்ந்த விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதல்வர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. சாலைகள் அமைப்பது, குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது, பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் அடிப்படையில் இத்தேர்வானது செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை: அமலாக்கத்துறை விளக்கம்!
அதேபோல், சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. பேரூராட்சியை பொறுத்தவரையில், விக்கிரவாண்டி முதல் இடத்தையும், ஆலங்குடி 2ஆவது இடத்தையும், வீரக்கால்புதூர் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 9ஆவது மண்டலம் முதல் இடத்தையும், 5ஆவது மண்டலம் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழா நிகழ்வில் இதற்கான விருதுகளை வழங்கி முதல்வா் ஸ்டாலின் கவுரவிக்கவுள்ளார். விருதுகள் தவிர, ரொக்கப்பரிசும் வழங்கப்படவுள்ளது.