திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மனைவி கலாமேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் சுஜித் என்கிற மகன் இருக்கிறான். நேற்று மாலை வீட்டின் அருகே இருக்கும் ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த மீட்பு படையினர் குழந்தையை மீட்க தீவிரமாக போராடி வந்தனர். இரவு தொடங்கிய இந்த பணி 17 மணி நேரம் கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. களத்தில் தமிழக அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் நேரடியாக நின்று மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. இடை இடையே சாரல் மழையும் பெய்து மீட்புப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்பு படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். காலை 5 மணி வரையிலும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் அதன் பின்னர் சத்தம் எதுவும் வரவில்லை என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இரவில் இருந்து களத்தில் நிற்கும் அமைச்சர்கள்..! தொடர்ந்து போராடி வரும் மீட்பு படையினர்..!

இந்த நிலையில் குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்னர். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளில் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தையை எளிதில் மீட்க வாய்ப்பிருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் குழந்தை சுஜித்தை ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் என்று  தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.


இதையும் படிங்க:மீண்டு வா மகனே சுர்ஜித்..! தமிழகமே ஏங்குகிறது..!