இரவில் இருந்து களத்தில் நிற்கும் அமைச்சர்கள்..! தொடர்ந்து போராடி வரும் மீட்பு படையினர்..!
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அமைச்சர்கள் இரவில் இருந்து களத்தில் இருக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மனைவி கலாமேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் சுஜித் என்கிற மகன் இருக்கிறான்.
பிரிட்டோவிற்கு சொந்தமான நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் போடப்பட்டிருக்கிறது. அது சரியாக மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விட்டான். இதனால் பதறிப்போன சுஜித்தின் பெற்றோர் செய்வதறியாது கதறித்துடித்தனர். உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த அவர்கள் மீட்புப்பணிகளை தொடங்கினர்.
ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தமிழக அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் குழந்தையை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். குழந்தை சுஜித்தின் பெற்றோரை தேற்றி ஆறுதல் கூறிய அவர்கள், இரவு முதல் அங்கேயே இருந்து மீட்பணிகளை கவனித்து வருகின்றனர்.
குழந்தையின் நிலை குறித்து அமைச்சர் விஜய பாஸ்கரே நேரடியாக அவ்வபோது தகவல் தெரிவித்து வருகிறார். ஒரு நொடி கூட தாமதிக்காமல் மீட்பு படையினர் போராடி வருவதாகவும், எப்படியாவது குழந்தையை உயிருடன் மீட்டு விடுவோம் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருக்கிறார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து குழந்தையை மீட்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.