வாடிக்கையாளர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்த விவகாரம்; பிரணவ் நகைக்கடை உரிமையாளர் கார்த்திகா கைது
திருச்சியை தலைமையிடமாக செயல்பட்டு வந்த பிரணவ் நகைக்கடையின் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.100 கோடி அளவில் நகைகளை பெற்று மோசடி செய்த விவகாரத்தில் அதன் உரிமையாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 8 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகினர்.
இதனால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் இருவர் மீதும் திருச்சி, மதுரை, சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். நூற்றுக்கணக்கான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
மேலும் கார்த்திகா, மதன் மீது பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு வழக்குப்பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதன் செல்வராஜ் நேரில் சரணடைந்தார். ஆயினும் மனைவி கார்த்திகா தலைமறைவாகவே இருந்து வந்த சூழலில் கார்த்திகா இன்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D