திருச்சியில் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் திடீர் வாந்தி மயக்கம்; உணவகத்திற்கு சீல்
திருச்சியில் பிரபல பெண்கள் கலைக்கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல பெண்கள் கலை கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த வண்ணம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ் மற்றும் பாண்டி ஆகியோர் அடங்கிய குழு நேற்று கல்லூரியின் உணவகத்தை ஆய்வு செய்தனர்.
மேலும் மாணவிகளுக்கு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் உணவு உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் கல்லூரியின் உணவகம் தற்காலிகமாக இன்று உணவு தயாரிப்பு தடை செய்யப்பட்டு உணவு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் அடுத்த பிரதமர்; திண்டுக்கல் ஐ லியோனி பேச்சு
மேலும், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையில் இருந்து அங்கு சமைக்கப்படும் உணவுகளை உட்கொண்ட மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய உணவு பாதுகாப்பு துறையின் கீழ் இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை வரப்பெற்றதை அடுத்து இங்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கான சான்றிதழை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.