வடிவேலு பாணியில் வாடகைக்கு எடுத்த காரையும் ஒப்படைக்காமல், வாடகையும் வழங்காமல் டிமிக்கி கொடுத்த நபர் கைது
தமிழகம் முழுவதும் காரை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டு காரையும் திருப்பி தராமல், வாடகையையும் தராமல் பலரையும் ஏமாற்றிவந்த பலே மோசடி கில்லாடியை குடவாசல் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த சிட்டிங் பாபு என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது இருந்த எண்ணற்ற வழக்கின் பின்னணியில் குண்டர் தடுப்பு சட்டமும் இவர் மீது பாய்ந்து தண்டனையை அனுபவித்துவந்தவர். நல்லவர் போல் நடித்து ஏமாற்றுவதில் பலே கில்லாடியான சிட்டிங் பாபு தமிழகம் முழுவதும் வலம்வந்து கார்களை மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்னர் காரையும் திருப்பி தராமல் அதற்கான மாத வாடகையையும் தராமல் இழுத்தடித்து மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்தவகையில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். மாதம் ரூ.30 ஆயிரம் வாடகையாகத் தருவதாக காரை லாவகமாக எடுத்துவந்த சிட்டிங் பாபு இரண்டு ஆண்டுகள் நெருங்கிய நிலையில் அவர் எடுத்து வந்த காரையும் தரவில்லை, அதற்கு உண்டான வாடகையையும் தராமல் கார் உரிமையாளர் பிரேம்குமாரை ஏமாற்றிவந்துள்ளார்.
சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை துரிதமாக விரைந்து வந்து காப்பாற்றிய காவலர்
இந்த நிலையில் பிரேம்குமார் குடவாசல் காவல் நிலையத்தில் சிட்டிங் பாபு மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிட்டிங்பாபுவை காவல் துறையினர் கடந்த சில மாதங்களாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று பலே கில்லாடி சிட்டிங் பாபு தங்கியிருந்த இடத்தை கண்டறிந்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து குடவாசல் காவல்துறை சிட்டிங் பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய முதியவர் மீட்பு
காவல்துறை நடத்தி விசாரணையில் சிட்டிங் பாபு ஏற்கனவே நாகை, சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதே போன்று கார்களை வாடகைக்கு எடுத்து வருவது, பிறகு கார் உரிமையாளர்களை அலைய விடுவது என அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்துவருவது தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் சிட்டிங் பாபு மீது வெளிநாடு அனுப்புவதாக சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய வழக்கும் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.