திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இருக்கிறது பட்டியேந்தல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(95). இவரது மனைவி வீரகங்கா(87). இந்த தம்பதியினருக்கு காளி என்கிற மகன் இருந்துள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து 16 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக காளியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

அவர்களது மரணத்திற்கு பிறகு பேத்தியை தங்களது பராமரிப்பில் ஜெயராமனும் அவரது மனைவியும் வளர்த்து வந்தனர். இதனிடையே வயது மூப்பு காரணமாக ஜெயராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவரை வீரகங்கா கவனித்து வந்துள்ளார். தீவிர சிகிச்சையில் ஜெயராமன் இருந்துவந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலைக்கண்டு வீரகங்காவும் பேத்தியும் கதறி துடித்தனர். ஜெயராமனின் இறுதிச்சடங்குக்கான பணிகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

கணவர் மீது அதீத பாசம் வைத்திருந்த வீரகங்காவால் ஜெயராமனின் பிரிவை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. அவரது உடலை கட்டியணைத்தவாறு அழுதுகொண்டிருந்தார். அந்தநேரத்தில் திடீரென அவர் பேச்சு மூச்சின்றி காணப்பட்டுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் எழுப்ப முயன்றபோது தான், வீரகங்கா உயிரிழந்தது தெரிய வந்தது. இது உறவினர்களை அதிர்ச்சியில் உறைய செய்தது. தாத்தா, பாட்டி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது கண்டு பேத்தி கதறி அழுதார். அவரை உறவினர்கள் தேற்றினர். பின் இருவரது உடல்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

சாவிலும் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியால் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.