இதை பார்க்க என் தாத்தா இல்லையே: கண் கலங்கிய உதயநிதி!
திருவண்ணாமலையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவை நினைத்து கண் கலங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் நடைபெற்ற கோடை விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கோடை விழாவை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து போளூர் பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். பின்னர் நாயுடுமங்கலம் பகுதியில் 110 அடி உயரம் கொண்ட திமுக கழக கொடி ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், வேலூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா நுழைவாயில் எதிரே புதியதாக கட்டப்பட்ட ரவுண்டானா மற்றும் ஜல்லிக்கட்டு காளை சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தடை இருந்து வந்த போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை போற்றும் வகையில் திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக ரவுண்டானா கட்டப்பட்டு அதன் நடுவே ஜல்லிக்கட்டு காளை சிலை நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஓரங்கட்டப்படும் கனிமொழி? திமுகவுக்குள் அடுத்த சலசலப்பு!
இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் 10,500 நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை பல இடங்களில் திறந்து வைத்த போதிலும், முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் திருஉருவ சிலையை நான் திறந்து வைத்திருக்கின்றேன். இதன் பிறகு கலைஞர் சிலையை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்கலாம் போகலாம். ஆனால் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் சிலை திறந்து வைத்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு.” என்றார்.
குறிப்பாக இன்று மதியம் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றபோது தனக்கு பல்வேறு நினைவுகள் மனதில் ஓடியதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “என் மனதில் சின்ன சோகம் மற்றும் வருத்தம் இருந்தது. குறிப்பாக, தற்போது சிறப்பான ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியைப் பார்ப்பதற்கும், நான் சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் அணி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், பின்பு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பார்ப்பதற்கும், என்னை வாழ்த்துவதற்கும், அறிவுரை கூறுவதற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இல்லையே என்ற ஒரு வருத்தம், சோகம் என் மனதில் ஏற்பட்டு உள்ளது. அந்த சோகம் கழகத்தின் மூத்த முன்னோடிகளான உங்களைப் பார்க்கும்போது தணிந்தது.” என்றார்.
தனது தாத்தாவான கலைஞர் கருணாநிதி குறித்து நினைவுகூர்ந்த போது, நா தழுதழுக்க, குரல் இறுக பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்கள் கலங்கினார். அது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.