தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்
திருவண்ணாமலையில் கொரோனா நோய்த்தொற்றால் மனைவி இறந்த நிலையில் அவரது கணவரும் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் கொரோனா நோய்த்தொற்றால் மனைவி இறந்த நிலையில் அவரது கணவரும் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(62). இவர் சன்னதி தெருவில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரகதாம்பாள்(59). இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு மு்னர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவரது குடும்பத்தினர் அத்தியந்தலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. தகவலறிந்த உறவினர்கள் ஏராளமானோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இதனிடையே, பிரகதாம்பாளுக்கு கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் விசாரணை செய்த போது தண்டராம்பட்டில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரசின் விதிமுறைப்படி அவரது உடல் பாதுகாப்புடன் தகன மேடையில் உடனடியாக தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மனைவி கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததில் மிகுந்த வேதனையில் இருந்த அவரது கணவரான பாலசுப்பிரமணியனுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும், உயிரிழந்த பாலசுப்பிரமணியனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மனைவி இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் கணவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.