மக்கள் வெள்ளத்திலும், மின்னொளியிலும் ஜொலி ஜொலிக்கும் திருவண்ணாமலை... தீபத் திருவிழாவிற்கு 2,615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வருடம்தோறும் 10 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் காலை மற்றும் இரவில் வலம் வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 7-ம் தேதி விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், அண்ணாமலையார் தேர், அம்மன் தேர், சண்டிகேசுவரர் தேர் என்கிற மகாரதம் வீதியுலாவும், டிசம்பர் 10-ம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்திருவிழா அன்று கிரிவலம் வரவும், மலையேறி அண்ணாமலையார் பாதத்தை காணவும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் செய்யும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 9 முதல் 12-ம் தேதி வரை சென்னை, கும்பகோணம், திருச்சி, சேலம், பெங்களூரு, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.