திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 7-வது முறையாக தடை.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.. ஏமாற்றத்தில் பக்தர்கள்..!
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியான அக்டோபர் 1-ம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியான அக்டோபர் 1-ம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு பேருந்து மற்றும் ரயில் சேவை தொடங்கி உள்ளது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புரட்டரி மாதம் வருகிற 30-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் தொடங்கி 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் பவுர்ணமி முடிவடைகிறது. இந்த நேரத்தில் தடையை மீறி கிரிவலம் வந்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே அக்டோபர் 1-ம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 7-வது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.