திருவண்ணாமலையில் இன்று புதியதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 814ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரசு தரப்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் வரிசையில் திருவண்ணாமலையும் இணைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 528-ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலும் வருபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும்,  முக கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதி இன்றி உள்ளே வருவபர்களுக்கு உதவி செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அப்படி இருந்த போதிலும் இன்று புதியதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 814ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வணிகர் சங்கத்தினர் வரும் 21ம் தேதி முதல் 30ம்தேதி அனைத்து கடைகளையும் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் வரிசையில் திருவண்ணாமலை 4வது இடத்தில் இருந்து வருவது குறிப்படத்தக்கது.