திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு தப்பி வந்த கொரோனா நோயாளி நடுரோட்டில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது ஆண். இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து திடீரென அவர் மாயமானார். அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனாலும், அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று காலை திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையோரம் அந்த நபர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற வாலிபர் என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் இரவு நேரத்தில் வீட்டுக்கு நடந்து சென்றதால், மூச்சுத்திணறல் அதிகரித்து மயங்கி விழுந்து இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, சாலையோரம் இறந்து கிடந்த நபரின் சடலத்தை உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், நேற்று மாலை சுகாதார முறைப்படி வாலிபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.