ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் பேன்சி ஸ்டோரில் 4000-க்கும் மேற்பட்ட கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்ரவர்த்தி  ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, சட்டவிரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட, திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த போலி பெண் டாக்டர்  கவிதா (41), அவரது கணவர் பிரபு (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, ஐபிசி 419, 420, 315 மற்றும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆக்ட் 1956 15(3) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டனர்.  

அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி பெண் டாக்டர் கவிதா 10-ம் வகுப்பும், அவரது கணவர் பிரபு பிளஸ் 2 படித்திருப்பதும் தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோதமாக மெடிக்கல் 'ஷாப்பிங் நடத்திய விவகாரத்தில் 2 முறை பிரபு கைது செய்யப்பட்டவர். மேலும், போலி டாக்டர்களான கவிதா, பிரபு ஆகியோர் நடத்திய சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில், பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

அதோடு, சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில், ஸ்கேன் ரிப்போர்ட்களும் சிக்கியிருக்கிறது. எனவே, ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலையில் பெண் சிசு கொலை தொடர்பாக ஏற்கனவே, மத்திய-மாநில அரசு அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில், 4 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.